உதயமாகியது யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் 

பலாலி சர்வதேச விமான நிலையம் இன்று காலை உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதன் போது இந்தியாவில் இருந்து முதலாவது விமானம் சற்று முன்னர் பலாலி சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்கியது.

இந்த ஆரம்ப நிகழ்வு சென்னையில் இடம்பெற்றதை அடுத்து பாலாலி சர்வதேச விமான நிலையத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித்சிங் சந்து இணைந்து திறந்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த விமான நிலையத்தின் அபிவிருத்திக்காக 2,250 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கம் 1,950 மில்லியன் ரூபாவையும், இந்திய அரசாங்கம் 300 மில்லியன் ரூபாவையும் வழங்கியுள்ளது.
3 கட்டங்களின் கீழ் இந்த விமான சேவை அபிவிருத்திப்பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. முதல் கட்டத்தின் கீழ் 950 மீற்றர் விமான ஓடு பாதை நவீன மயப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக 72 இற்கு குறைவான Bombardier – 100 ரக விமானங்களை பலாலி விமான நிலையத்தினால் கையாளக்கூடியதாக அமைந்திருக்கும்.

பாலாலி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. இலங்கையின் 5 சர்வதேச விமான நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். அடுத்த மாதம் (நவம்பர்) முதலாம் திகதி இந்த விமான நிலையத்தில் இருந்து விமான சேவைகள் ஆரம்பிக்கப்படும் என இலங்கை சிவில் விமான சேவை அதிகாரசபை நேற்று தெரிவித்தது.

ஏற்கனவே இந்த விமான சேவை இம் மாதம் 27 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும் தற்பொழுது இந்த விமான சேவை அடுத்த மாதம் முதலாம் திகதி ஆரம்பமாகும் என்று அதிகார சபையின் அதிகாரி நேற்று தெரிவித்தார்.

இந்தியன் எயார்லைன்ஸ் விமான நிறுவனத்தின் விமானங்களே இந்த சேவைகளை ஆரம்பிக்கவுள்ளது. முதலில் பலாலியில் இருந்து சென்னைக்கான விமான சேவையை ஆரம்பிப்பதற்கு இந்த நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளது.


வாரத்தில் 3 நாட்களுக்கு பலாலிக்கும் சென்னைக்கும் இடையில் இந்த விமான சேவை இடம்பெறும். தேவைகளின் அடிப்படையில் விமான சேவைகளை விஸ்தரிப்பதற்கும் அந்த நிறுவனம் எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

.