ஆழமாக்கப்படவுள்ள நந்திக்கடல்… 

நந்திக்கடல் ஆழமாக்கப்பட்டு அக்கடற் பகுதியை நம்பி வாழும் மக்களின் பொருளாதாரம் மேம்படுத்தப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என கடற்தொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பலதரப்பட்ட மக்களை சந்தித்து அவர்களது பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளார். கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடி அவர்களது தேவைப்பாடுகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்ட பின்னர் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது கடற்றொழிலார் சங்க பிரதிநிதிகளால் பல்வேறு தேவைப்பாடுகளும் பிரச்சினைகளும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தன. குறிப்பாக யுத்தத்தின் பின்னர் மீள் குடியேறிய குறித்த மாவட்ட கடற்றொழிலாளர்கள் கடற்றொழிலை முன்னெடுத்துச் செல்ல பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவது மட்டுமல்லாது தொழிலை மேற்கொள்வதற்கு தேவையான வளங்கள் அற்ற நிலையிலும் காணப்படுகின்றனர்.

அத்துடன் சட்டவிரோத உபகரணங்களை பயன்படுத்தி சிலர் தொழிலை மேற்கொள்வதனால் இதர மீனவர்களது தொழில் பாரிய அளவில் திட்டமிட்டு பறிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர். மேலும் பிற பகுதி கடற்றொழிலாளர்கள் இப்பகுதிகளில் அத்துமீறி தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவது, இயற்கையின் பாதிப்பு என பலவகைகளிலும் பாதிப்பக்கள் ஏற்படுகின்றன. எனவே இவ்வாறான பிரச்சினைகளுக்கு தகுந்த தீர்வையும் பாதுகாப்பையும் பெற்று தந்து தமது தொழில் நடவடிக்கைளுக்கு உதவி புரியுமாறு கோரிக்கை விடுத்தனர்.

கடற்றொழிலாளர்களது பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நான் தேசிய ரீதியான அமைச்சராக இருக்கின்ற போதிலும் வடக்கு கிழக்கு பிரதேசங்களை முன்னிறுத்தி பல்வேறு திட்டங்களை மேற்கொள்ள முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளேன். அத்துடன் கடற் றொழிலை மட்டும் நம்பியிராது அதனுடன் தொடர்புடைய ஏனைய தொழில் முயற்சிகளை உருவாக்கி தமிழ் மக்களின் வாழ்வாதார பொருளாதார நிலையில் மாற்றங்களை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளேன். அத்துடன் நந்திக்கடல் மற்றும் நாயாறு கடல் பிரதேசங்களில் காணப்படும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பிலும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.

.