பண்டாரநாயக்க விமானநிலையத்தில் நாளொன்றில் 500 பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளக்கூடிய ஆய்வு கூடம்

இலங்கைக்கு வருகைதரும் பயணிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறதா எனக் கண்டறிவதற்கு நாளொன்றில் 500 பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளக்கூடிய வசதிகளைக்கொண்ட ஆய்வுகூடக் கட்டமைப்பொன்று கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

விமானநிலையங்கள் மற்றும் விமானசேவைகள் நிறுவனத்தின் 16.5 மில்லியன் ரூபா நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இந்த ஆய்வுகூடத்தில் கொவிட் – 19 தொற்று ஏற்பட்டிருக்கிறதா என்பதைக் கண்டறியும் ஆரம்பகட்டப் பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும். இந்த ஆய்வுகூடம் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான மாதிரிகளைத் தானாகவே பிரித்தெடுக்கும் உபகரணங்கள், பி.சி.ஆர் பரிசோதனை உபகரணங்கள், மருத்துவ குளிரூட்டிகள் சுவாசக்கருவிகள், மருத்துவ உதிரிப்பாகங்கள் உள்ளடங்கலான நவீன வசதிகளையும் நீர்வழங்கல், மின்சாரம், தொலைத்தொடர்பாடல் ஆகிய வசதிகளையும் கொண்டிருக்கிறது. அத்தோடு இந்த ஆய்வுகூடத்தில் நாளொன்றுக்கு 500 பி.சி.ஆர் பரிசோதனைகளை முன்னெடுக்க முடியும்.

நவீன வசதிகளுடன் கூடிய இந்த ஆய்வுகூடம் நேற்று வியாழக்கிழமை விமானநிலையங்கள் மற்றும் விமானசேவைகள் நிறுவனத்தின் தலைவரால் சுகாதார அமைச்சிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.

பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்திற்கு வருகைதரும் அனைத்துப் பயணிகளும் தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்படுவதற்கு முன்னதாக விமானநிலையத்திலுள்ள இந்த ஆய்வுகூடத்தில் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். ஆய்வுகூடத்தில் இரண்டு மணித்தியாலங்களுக்குள் 96 பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளவும், அதன் முடிவுகளை 4 மணிநேரத்திற்குள் பெற்றுக்கொள்ளவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.

.