2030இல் 350 மில்லியன் கிலோகிராம் தேயிலை தயாரிப்பிற்கான திட்டம்…   

3.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான 350 மில்லியன் கிலோகிராம் தேயிலை தயாரிப்புக்களை 2030 ஆம் ஆண்டில் எட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

தேயிலை தொழிற்துறை சங்கத்தின் (Colombo Tea Traders Association ) 125 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வில் உரையாற்றிய இந்த அமைப்பின் துணைத்தலைவர் மைக்கல் டி சொய்சா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செயலமர்வு ஒன்று கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்றது என்று தெரிவித்த அவர் இதில் இலங்கை தேயிலை சபையின் முன்னாள் துணைத்தலைவர் றொகான் பெத்தியகொட மற்றும் ஜானகி குறுப்பு ஆகியோர் இது தொடர்பான வழிகாட்டிகளை தெரிவித்தனர். நான் மற்றும் அணில் குக் உள்ளிட்ட இத் தொழிற்துறையின் முன்னோடிகள் இதற்கான ஆரம்ப நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்.

இலங்கையின் தேயிலை உற்பத்தி கடந்த இரண்டு தசாப்தங்களாக 300 மில்லியன் கிலோகிராம் ஆகவே அமைந்துள்ளது. 2013 ஆம் ஆண்டில் இது 340 மில்லியன் கிலோகிராம் ஆக அதிகரித்திருந்தது ஆனால் தேயிலை உற்பத்தி நிலங்கள் அதே அளவாகவே இருந்துள்ளதாக அதிகார பூர்வ தகவல்கள் தெரிவித்துள்ளன. 307.1 மில்லியன் கிலோகிராம் உற்பத்தி 2017 அம் ஆண்டு இடம் பெற்றிருந்தது. 2018 ஆம் ஆண்டு இத் தொகை 303.8 மில்லியன் கிலோகிராம் ஆக குறைவடைந்திருந்தது.

உலக நாடுகளில் உடனடியாக பயன்படுத்தக்கூடிய தேயிலை தயாரிப்பு பொதிகளே பயன்படுத்தப்படுகின்றன. அதாவது உடனடியாக பயன்படுத்தக்கூடிய தேயிலை மற்றும் குளிரூட்டப்பட்ட தேயிலை தயாரிப்புக்கள் பயன்படுத்தப்படுகின்றன. 2007 ஆம் ஆண்டு தொடக்கம் 2018 வரையான காலப்பகுதியில் இலங்கையில் தேயிலை ஏற்றுமதி மூலம் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களில் இருந்து 1.63 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஏற்றுமதி வருமானம் பெறப்பட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டில் 1.63 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானம் பெறப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டில் 1.53 பில்லியன் அமெரிக்க டொலராக இருந்த வருமானம் 2018 ஆம் ஆண்டில் 1.43 பில்லியன் அமெரிக்க டொலராக குறைவடைந்தது.

மத்திய கிழக்கு நாடுகளுக்கே இலங்கையின் தேயிலை ஏற்றுமதி இடம்பெற்றுள்ளன. சிலோன் ரீ ஐ தற்போது தென் ஆபிரிக்க நாட்டவரும் பயன்படுத்த முன்வந்துள்ளனர். 2030 ஆம் ஆண்டை இலக்காக கொண்ட திட்டம் தேயிலை தொழிற்துறைக்கு மூலோபாயமாக அமையும் என்றும் தொழில்துறை முக்கியஸ்தர் குக் தெரிவித்தார்.

அனைத்து பங்குதாரர்களும் சரியான வழிகாட்டல்களை எதிர்பார்த்துள்ளனர். எனவே தனியார் துறையினர் இந்த தொழிற்துறையின் எதிர்காலம் குறித்து பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டுமெனவும் இந்த தொழிற்துறைக்கு தேவையான மாற்றங்களை மேற்கொள்வதற்கு தோட்ட அதிகாரிகள் ஏற்றுமதியாளர்கள் தேயிலை விற்பனை தரகர்கள் ஒன்றிணைந்து இத் தொழிற்துறைக்கு தேவையான மாற்றங்களை படிப்படியாக முன்னெடுக்க வேண்டும்.

அமெரிக்க நிதி உதவியுடனான USAID’s The Competitivenes Program எனும் திட்டம் 2007 ஆம் ஆண்டு வரையில் முன்னெடுக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த திட்ட இலக்கை 2030 இல் எட்டுவதற்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

தேயிலை தொழில் துறையும் இந்த அனுபவங்களை பெற்றுக் கொள்வதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் குக் தெரிவித்தள்ளார்.

இதேவேளை பேண்தகு திட்ட நடைமுறைகளை முன்னெடுத்து தேயிலை தொழில் துறையின் சுற்றுப்புறச் சூழலையும் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் இந்த திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் என துணைத்தலைவர் மைக்கல் டி சொய்சா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.

.